Thursday, September 28, 2006

மன்னன் பாரி

பாரிவள்ளல் ஆண்டு கொண்டிருந்த பறம்பு நாடு எத்தகைய மக்களைப் பெற்றது, எத்தகைய செல்வத்தைப் பெற்றது? பாரி இறந்த பின் பாரியின் இரு பெண்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்த கபிலர், இப்புறநானூற்றுப் பாடல் வழி, தனது கலக்கத்தை கூறுமிடத்து, பறம்பு நாட்டின் செல்வத்தைப் பற்றிப் பாடுகிறார். (புறம்: 113)

பெரும் புகழை உடையதாம் பறம்பு நாடு. அந்நாட்டு மக்களும் பாரியைப் போலவே கொடைத் தன்மையில் சிறந்திருந்தனராம். விருந்தினர்கள் தங்களுக்கு வேண்டும் அளவு அருந்துவதற்காக, அவர்கள் வீடுகளில் உள்ள மதுச் சாடிகள் திறந்தே இருக்குமாம். வருபவர்கள் பசியாற, ஆட்டுக் கிடாய்களை வெட்டிய வண்ணம் இருப்பராம். கொழுந்துவையலையும், ஊன் கலந்த சோற்றையும் எப்பொழுதும் சமைத்த வண்ணம் இருப்பராம். 'இத்தகைய செல்வம் நிறைந்தது பாரி நாடு. ஆனால் இப்பொழுது அவனில்லாமல் மக்கள் அனைவரும் கலங்கியிருக்கின்றனர். பாரியின் மக்களை உரிய கணவரிடம் சேர்ப்பிக்க அழைத்துச் செல்கிறேன்' என்று தனது கையறு நிலையை விளக்கியிருக்கிறார் கபிலர்.
பிரான்மலை அல்லது பறம்பு மலை


முல்லைக்குத் தேர்கொடுத்த வள்ளல் பாரியை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அம்மன்னர் அரசாண்ட பறம்பு மலையைத் தெரியுமா?


தன் ஆட்சிக்குள் பட்ட முன்னூறு ஊர்களையும் கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பரிசாக வாரி வழங்கிய வள்ளல் பாரியின் தலைமையிடம்தான் பறம்பு மலை.




எங்கே இருக்கிறது பறம்புமலை?


சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வட்டத்துக்குள் பட்ட சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக பொன்னமராவதி செல்லும் சாலையில் உள்ளது.


சங்க காலத்தின் பறம்பு மலை என்றும். சமய காலத்தில் திருக்கொடுங்குன்றம் என்றும் பெயர் பெற்ற இம்மலையும், மலைசார்ந்த ஊரும் தற்போது பிரான்மலை என்று பெயர்பெற்றிருக்கின்றன. தரைமட்டத்திலிருந்து 2450 அடி உயரமுள்ளது இம்மலை. ஈண்டு நின்றோருக்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்


என்று கபிலரால் பாடப்பட்ட இம்மலை எங்கிருந்து பார்த்தாலும் ராஜகோபுரம் போல கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.


மலையடிவாரத்தின் துவக்கத்தில் வசதியான படிக்கட்டுகளும், மேலே போகப்போக பாறைகளில் படி போல செதுக்கப்பட்டும், ஓரங்களில் பாதுகாப்புக் கைப்பிடியும் அமைக்கப்பட்டுள்ளன.


மலையில் கால்பகுதி ஏறியதும் இயல்பான களைப்பு ஏற்படலாம். ஆசுவாசம் தேடும் அவ்வேளையில் இயற்கையின் கூடாரமாக உதவுகிறது முக்காலிக்கல். குளுகுளு காற்று வரும் இக்கல்லின் இடைப்பகுதி ஓய்வெடுப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது.


மூங்கிலரிசி, பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் ஆகியவை இயற்கையாகவே பிரான்மலையில் விளைகின்றன.


இம்மலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான மலர்களும் பூத்துகிடப்பதை தனது குறிஞ்சிப்பாட்டில் விவரிக்கிறார், பாரியின் உற்ற தோழரான கபிலர்.


அதே போல, 'பாரி பறம்பின் பைந்தண் சுனைநீர்' என்று சங்க இலக்கியத்தில் சிறப்பித்துக் கூறப்படும் நூற்றுக்கணக்கான குளிர்ந்த சுனைகளும் இங்கு குறிப்படத்தக்க அதிச அம்சம். மஞ்சள் நிறத்தில் மெல்லிய படலம் படர்ந்த மஞ்சள் சுனை, சூரிய ஒளியே புக முடியாத காணாச்சுனை காசிச்சுனை என்று அவற்றுக்குப் பெயர்களும் உண்டு.


அதே போல பறம்பு மலை அடிவாரத்தில் உள்ள தேனாடி தீர்த்தம் துவங்கி மலை உச்சியில் உள்ள இராமர் தீர்த்தம், லக்ஷ்மணர் தீர்த்தம் வரை 108 புனிதத் தீர்த்தங்கள் உள்ளன. மலையில் ஏறக்குறைய 10 கிலோமீட்டர் ஏறுவதால் ஏற்பட்ட களைப்பெல்லாம் மலை உச்சியிலுள்ள குளிர்ந்த ராமர் தீர்த்தத்தில் நீராடும்போது பறந்துவிடும்.


பறம்புமலை உச்சிவிளிம்பில் இராமர் தீர்த்தக்கரையை ஒட்டி சையத் அவூலியா ஒலியுல்லா தர்ஹா உள்ளது. வடநாட்டவர் உள்ளிட்ட முஸ்லிம்களும், இந்துக்களும் வழிபடும் ஒற்றுமைத் தலம் இது. இம்மலையின் அடிவாரத்தில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்கு உள்பட்ட குயிலமுத நாயகி உடனாய திருக்கொடுங்குன்ற நாதர் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகோ அழகு


சங்க காலத்தில் கபிலர், அவ்வையார், நக்கீரர், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார், மிளைக் கந்தனார் முதலிய புலவர்களும், சமய எழுச்சிக்காலத்தில் திருஞானசம்பந்தர் பதிகம் பாட, அப்பரும் மாணிக்கவாசகரும் தத்தமது பாடல்களில் இத்தலத்தை நினைவு கூறுகின்றனர். அருணகிரிநாதரும் பாடியுள்ளார். இங்கு ஆண்டு தோறும் சித்திரை பத்து நாள் திருவிழாவில் வள்ளல் பாரியின் விழா நடைபெறுகிறது.


இம்மலை உச்சியில் வேல்வடிவில் பாலமுருகன் கோயில் கொண்டுள்ளான். பிள்ளையார் கோயிலும் உள்ளது. கார்த்திகை அன்று |திருப்பரங்குன்றத்தைப் போல இம்மலை உச்சியிலும் பெரிய அளவில் தீபம் ஏற்றப்படுகிறது.


இம்மலையின் பின்பகுதிகளில் அடுக்கடுக்கான பகுதியாகக் காணப்படும் இடங்களில் முன்னர் அரண்மனை இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. பலமுறை நடந்த போர்களில் அவை அழிக்கப்பட்டிருக்கவேண்டும். சங்க காலத்தில் மூவேந்தர்களாலும், பின்னர் பாண்டிய சோழப் போர்களாலும் இம்மலைப்பகுதி சூறையாடப்பட்டிருக்கிறது.


இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் மருதுபாண்டியர்களுக்கு உற்ற களமாக இம்மலைப்பகுதி அமைந்திருக்கிறது. இங்கு நடைபெற்ற போர் குறித்து சிவகங்கை விடுதலைக்கும்மி, அம்மானைப்பாடல்கள் பாடுகின்றன. அதற்குச் சான்றாக உள்ளன சிதைந்த பீரங்கிகள்.


[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனின்]] தம்பி ஊமைத்துரை தலைமறைவாகி வசித்த குகையும் பறம்பு மலையில் உள்ளது.


மழைக்காலங்களில் இம்மலை மீது மேக வெண்போர்வை போர்த்தும் காட்சி அற்புதமானது. அதே போல சூரியோதயத்தின்போதும், பௌர்ணமி இரவின்போதும் கவித்துவ அழகாய்த் திகழும் இம்மலை. அதனால்தான் பாரி மகளிர் தம் தந்தையின் பிரிவை நினைத்து, 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்' என்று புறப்பாடல்கள் இசைத்தனர்.


பிறை நாட்களிலும் அதுவுமில்லாத இரவுகளிலும் விண்மீன்கள் மினுக்கும் நள்ளிரவில் இம்மலை குளிரில் உறைந்து கிடக்கும் காட்சி, வள்ளல் பாரியை வஞ்சகமாகக் கொன்ற சோகத்தை நினைவு படுத்துவதாகவே தோன்றுகிறது..


பேராசிரியர் கிருங்கை சேதுபதி தினமணி 5.2.2006

6 comments:

Jaybee said...

You can see more stuff on Piranmalai in these URLs-

http://www.visvacomplex.com/

http://groups.yahoo.com/group/agathiyar/
http://www.TreasureHouseOfAgathiyar.net

ENNAR said...

ஐயா நன்றி

வவ்வால் said...

நல்லப்பதிவு என்னார்,
மூவேந்தர்கள் பறம்பு மலையை மாதக்கணக்கில்முற்றுகை இட்டும் பாரியை வீழ்த்த முடியாமல் , ஆடல் பாடல் செய்யும் பாணர்கள் போல் மாறு வேடம் போட்டு போய் இசைத்து ஆடி , பரிசாகவே அவன் உயிரையும் பெற்றனர் என ஒரு கதையுண்டு.

பாரியின் மகள்கள் அங்கவை,சங்கவை(சிவாஜி படத்தில் கிண்டலாக பயண்படுத்தி இருப்பார்கள்) அவர்களை நல்ல இடத்தில் மணமுடித்து வைக்க சொல்லி கபிலருடன் அனுப்பிவிட்டு இறந்து விடுவார் பாரி. கபிலரின் முயற்சியால் ,மூவேந்தர்களின் பகை வரும் என தெரிந்தும் இரும்பொறை என்ற மன்னன் தான் மணந்து கொண்டார் என நினைக்கிரேன். பின்னர் சோழ மன்னனுடன் நடந்த போரில் இரும்பொறையும் சிறைப்பட்டான்.

ENNAR said...

ஆமாம் நன்றி வவ்வால்

Antony Kaspar said...

சுறப்பு

ENNAR said...

அன்தோணிக்கு நன்றி

[Valid RSS]